அரசியல் வருகைக்கு பின், முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்ன சொல்லப்போகிறார்?, அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் கட்சியின் அரசியல் மாநாட்டையொட்டி, விழாக்கோலம் பூண்டுள்ளது விக்கிரவாண்டி.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறவுள்ளது விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு. 85 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டுக்காக ஏற்பாடு பணிகளை ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்கொண்டு வந்தனர் தவெக நிர்வாகிகள்.
மாநாட்டு திடலை அலங்கரிக்கும் கட் அவுட்கள்:
பணிகள் நிறைவடைந்த நிலையில், தலைவர்களின் கட் அவுட்கள், மாநாட்டுத் திடலை அலங்கரிக்கின்றன. மாநாட்டு மேடைக்கு இடதுபுறம் சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேடைக்கு வலது புறம் தமிழன்னை, சேரர், சோழ, பாண்டியர் மன்னர்கள் மற்றும் விஜய் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.
மேடையில் “வெற்றிக் கொள்கை திருவிழா” என்ற வாசகம்:
மாநாட்டு மேடையில் “வெற்றிக் கொள்கை திருவிழா” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மாநாட்டு திடலின் முகப்பு , செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலுக்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ரிமோட் மூலம், 100 அடி உயரத்தில் தனது கட்சிக் கொடியை ஏற்றிவைக்கவுள்ளார். கொடியேற்றிய பின்னர், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ‘ரேம்ப்’ மீது நடந்து செல்கிறார். ரசிகர்களாக இருந்தவர்கள் தொண்டர்களாக மாறிய நிலையில், அவர்களை உற்சாகப்படுத்திய பின் மாநாட்டு மேடைக்குச் செல்கிறார் விஜய்.தவெக மாநாட்டிற்காக காவல்துறையிடம் அனுமதி பெற்றபடி, தொண்டர்கள் அமர 40 கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடலில் 50 ஆயிரம் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. மாநாட்டை சிரமமின்றி காணும் வகையில், மாநாட்டு பந்தல் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், 300 மொபைல் கழிவறைகள் மற்றும் 700 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நான்காயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் தன்னார்வலர்களுடன், துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவன பாதுகாவலர்கள் 300 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ வசதிகள், மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையில் உள்ளன.
தற்காலிக டவர் அமைப்பு:
மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த பிரமாண்ட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 152 ஏக்கரில் பேருந்துகளையும், 127 ஏக்கரில் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களையும் நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலுக்கு உள்ளே செல்ல 3 வழிகள், வெளியே செல்ல 10க்கும் மேற்பட்ட வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதால், மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது.அரசியல் வருகைக்கு பின், முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்ன சொல்லப்போகிறார்?, அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.