நூர் அகமது, ரவிசந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் உள்ளிட்ட 7 வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஷ்வினையும், நூர் அகமதுவையும் வாங்கியது ஏன் என்ற கேள்விக்கு சி.எஸ்.கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் முதல் நாளான நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை வாங்கியது.
நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் உள்ளிட்ட 7 வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த நிலையில், அஷ்வின் மீண்டும் சென்னை அணிக்கு திரும்புவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் வீரரான நூர் அகமதை ஏலத்தில் எடுத்தது ரசிகர்களை ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வினையும், நூர் அகமதையும் ஏலத்தில் எடுத்தது ஏன் என்ற கேள்விக்கு சி.எஸ்.கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “அஷ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். என்ன விலை என்பது அவ்வளவு முக்கியமில்லை. அவர் எப்படி அணியில் பொருந்துகிறார் என்பதும் முக்கியம். அவரை நாங்கள் பல வழிகளில் பயன்படுத்த முடியும். மேலும் சென்னை அணியுடன் அஷ்வினுக்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு உள்ளது.அவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரின் சாதனைகள் அதிகம். மிகவும் திறமையான வீரர். அவரிடம் இருக்கும் அனுபவங்கள் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.மேலும் நூர் அகமதை பற்றி பேசும்போது, “போட்டியின் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பது முக்கியம். பந்து நன்றாக ஸ்பின் ஆகும்பட்சத்தில் நூர் அகமதால் நிறைய விக்கெட்டுகளை எடுக்க முடியும். 20 ஓவர் போட்டிகள் எப்படி செல்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். நீங்கள் ரன்களை கட்டுப்படுத்துவதை விடவும் விக்கெட்டுகளை எடுப்பது முக்கியம். இல்லையென்றால் திடீரென ஒரு வீரர் வந்து போட்டியின் போக்கையே மாற்றி விடுவார். எனவே விக்கெட்டுகளை எடுக்கும் வீரர்களை நாங்கள் வாங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், ரச்சின் ரவீந்திரா அதிக விலை போகாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்தார். “அவர் கடந்த 2 ஆண்டுகளாக பிரமாதமாக விளையாடியுள்ளார். ஜடேஜாவைப் போன்றே அவர் விளையாடினாலும், வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அவரை நன்றாக பயன்படுத்துவோம். குறைந்த விலையிலேயே ரச்சின் கிடைத்தது மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.