TikTok: அமெரிக்க அரசின் தடை உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியை தொடர்ந்து, டிக்டாக் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
டிக்டாக் சேவை நிறுத்தம்:
தேசிய தடை விதிக்கப்படுவதற்கு முன்பு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அமெரிக்காவில் உள்ள தனது பயனர்களுக்கான TikTok அணுகலை அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் துண்டித்துள்ளது. அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்யும் அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது, அதைத் தொடர்ந்து, இந்த தட விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஜோ பிடன் அரசாங்கம் தலையிடாததாலும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் வரை அவர் தலையிட முடியாததாலும், டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் உள்ள தனது பயனர்களுக்கான அணுகலைத் தற்காலிகமாக துண்டித்துள்ளது.
டிக்டாக் சொன்ன தகவல்:
பயனர்கள் பயன்பாட்டைப் பயன்படுத்த முயற்சித்தபோது, அவர்களின் திரையில் ஒரு செய்தி தோன்றியது, அதில் “டிக்டாக்கை தடைசெய்யும் சட்டம் அமெரிக்காவில் இயற்றப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் டிக்டாக்கை இப்போதைக்கு பயன்படுத்த முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஏற்கனவே இந்த செயலியை தங்களது சாதனங்களில் நிறுவிய பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று நம்பப்பட்டது. ஆனால், டிக்டாக்கின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை, தற்போதைய பயனர்களுக்கும் புதிய பதிவிறக்கம் செய்பவர்களுக்கும் இந்த செயலி முற்றிலும் அணுக முடியாததாகிவிட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.
முடிவை மாற்றுவாரா ட்ரம்ப்?
அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. அதே நாளில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். டிக்டாக் தடை சட்டத்தை அமல்படுத்துவது வரவிருக்கும் நிர்வாகத்தின் பொறுப்பு என்று வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தடையை டிரம்ப் முதலில் ஆதரித்த போதிலும், பின்னர் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக பேசும்போது, “டிக்டாக் குறித்த எனது முடிவு வெகு விரைவில் எடுக்கப்படும், ஆனால் நிலைமையை மறுபரிசீலனை செய்ய எனக்கு நேரம் வேண்டும்” என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்திலும் தடையா?
இந்நிலையில், சீன அரசாங்கத்துடனான பைட் டான்ஸின் உறவின் காரணமாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் இது ஒரு தேசிய பாதுகாப்பு அபாயம் என்று குறிப்பிட்டு தடை சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் அந்த செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் அல்லது தடை விதிக்கப்படும் என்ற சட்டத்தை உச்சநீதிமன்றம் அண்மையில் உறுதிப்படுத்தியது. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் வழியையே இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகள் பின்பற்றி வருகின்றன. எனவே, ஒருவேளை ட்ரம்ப் டிக்டாக் மீதான தடையை நீக்க மறுத்துவிட்டால், அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலும் அந்த செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், தேசிய பாதுகாப்பு என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கடந்த 2020ம் ஆண்டே, இந்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.