விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் தற்போது தீவிர அரசியல் களத்தில் களமிறங்கியுள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமிக்கு கல்தா:
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.விற்காக சிறப்பாக பணியாற்றியதன் அடிப்படையில் ஜான் ஆரோக்கியசாமி தவெகவிற்காக பணியாற்ற அழைக்கப்பட்டார். ஆனால், அவரது செயல்பாடுகளும், இணையத்தில் லீக்கான அவரது ஆடியோ என சொல்லப்படும் செல்போன் உரையாடல்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி வந்தது.
ஆதவ் அர்ஜுனா ஆர்வம்:
விஜய்யுடன் தொடக்கம் முதலே கூட்டணி சேர மிகுந்த ஆர்வம் காட்டி வந்தவர் ஆதவ் அர்ஜுனா. தமிழக வெற்றிக்கழகத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணி வைக்க முழு மூச்சில் பணியாற்றினார்.
ஆனால், தி.மு.க. கூட்டணியில் விசிக இருந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், விசிக-வில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்த நிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
பேச்சுவார்த்தை:
இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – தவெக கைகோர்க்க உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பினரும் முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக விஜய்யின் தவெக-விற்கு ஆலோசகராக ஆதவ் அர்ஜுனா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அடுக்குமாடி குடியிருப்பில் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு விஜய்யின் செயல்பாடுகள் ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனையின் அடிப்படையில் இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதிமுக – தவெக கூட்டணியா?
ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் விஜய்க்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தி.மு.க.வை வீழ்த்த விஜய்யை மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக மாற்ற ஆதவ் அர்ஜுனா தொடக்கம் முதலே தீவிரமாக பணியாற்றி வந்தார். அவர் தவெக-வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
அவர் தவெக- அதிமுக கூட்டணிக்காக தீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில், தற்போது விஜய்யின் ஆலோசனையில் அவரது நிறுவனம் இயங்க உள்ளதால் அதிமுக -தவெக கூட்டணி ஏற்பட பேச்சுவார்த்தைகள் இன்னும் விறுவிறுப்பாக நடக்கும் என்றே கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், விஜய் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே பலரும் கணித்துள்ள நிலையில் அவரின் ஒவ்வொரு செயல்பாடும் ஆளுங்கட்சியான தி.மு.க. மட்டுமின்றி ஒவ்வொரு கட்சியினராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.