தமிழ்நாட்டில் 2026 தேர்தலை குறி வைத்து கட்சிகள் இயங்க ஆரம்பித்துவிட்டன. இதில், மக்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருப்பது தவெக என்ன செய்யப் போகிறது என்பதுதான். அது குறித்து தற்போது காணலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம்தான் என்றாலும், அரசியல் களம் என்னவோ இப்போதே சூடுபிடித்துவிட்டது. பல்வேறு கட்சிகளும் கூட்டணி கணக்குகளை போட்டு வருகின்றன. அதில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது அதிமுக-தவெக கூட்டணி அமையுமா என்பதுதான். அந்த பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
விடாக்கொண்டனாக இருக்கும் இபிஎஸ்
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், தவெக உடன் கூட்டணி வைப்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, கூட்டணி அமைத்தாலும், முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என்பதில் அதிமுகவினர் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதை உறுதி செய்வதுபோல், சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியே 2026 தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும் என்றும், அதற்கு ஆதரவு தருபவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க அதிமுகவினர் தயாராக உள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அதிமுக தரப்பிலிருந்து விஜய்க்கு 60 சீட்டுகளும், அமைச்சரவையில் இடமும் தருவதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை துணை முதலமைச்சர் பதவிக்கு விஜய் ஒத்துவந்தால், அதிமுக-தவெக கூட்டணி அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.
கூட்டணிக்காக விட்டுக்கொடுப்பாரா விஜய்.?
நடிகர் விஜய் சமீபத்தில் கட்சி தொடங்கியதே, 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்துதான். அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசும்போது கூட, கூட்டணி வைப்பத்தில் தனக்கு இருந்த விருப்பத்தையும், அப்படி கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனவும் அதிரடியாக அறிவித்திருந்தார் விஜய். தற்போது தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்ட விஜய், தவெக கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்துவருகிறார். ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோரை கட்சியில் இழுத்ததன் மூலம், பல்வேறு கணக்குகளை விஜய் போட்டுவருவது தெளிவாக தெரிகிறது.
இப்படி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு, தங்களது தலைமையில் கூட்டணியை அமைப்பதற்கான வேலைகளை செய்துவரும் விஜய், கூட்டணிக்காக முதல்வர் வேட்பாளர் என்பதை விட்டுக்கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவினருடனான பேச்சுவார்த்தை தொங்கலில் இருப்பது கூட இதனால்தான் என கூறப்படுகிறது. துணை முதலமைச்சர் என்பதெல்லாம் சரிப்பட்டு வராது என விஜய் நினைப்பதாக கூறப்படுகிறது.
இப்படி, இரண்டு கட்சிகளுமே கறாராக இருப்பதால், அதிமுக-தவெக கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் எதிர்காலத்திற்காக விஜய் விட்டுக்கொடுப்பாரா அல்லது வாழ்வா சாவா என்று இருக்கும் அதிமுகவை மீட்க, இபிஎஸ் இறங்கி வருவாரா என்பதுதான் தற்போது மக்களிடையே எழுந்திருக்கும் கேள்வி. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.