நீண்ட நேரம் கழித்துதான் அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்களை கவனித்த சக மாணவிகள் விசாரித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில் ரத்தகறையும் இருந்துள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் வகுப்புகள் நடக்கும் போது கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து தொப்புள் கொடியை துண்டித்து குப்பைத் தொட்டியில் வீசிய மாணவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலம் கலிகாலமாக மாறியதற்கு இதுவும் ஒரு உதாரணமோ?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்துள்ளார். வகுப்பு நடந்து கொண்டு இருந்தபோது தனக்கு வயிறு வலிப்பதாக கூறிய அந்த மாணவி, பேராசிரியையிடம் கூறிவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரம் கழித்துதான் அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்களை கவனித்த சக மாணவிகள் அவரிடம் விசாரித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில் ரத்தகறையும் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் அந்த மாணவியிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுள்ளனர். அப்போது அந்த மாணவி தனக்கு மாதவிடாய் காரணமாக ரத்தகறை உள்ளது. இதனால் உடல் சோர்வாக உள்ளது என்று சாக்குபோக்கு கூறியுள்ளார்.
இருப்பினும் சிறிது நேரத்தில் அந்த மாணவிக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டதை கவனித்த பிற மாணவிகள் தங்களின் பேராசிரியையிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த மாணவியை கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அந்த மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். மாணவிக்கு குழந்தை பிறந்ததால் தான் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவிக்கவே பேராசிரியை மற்றும் சக மாணவிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் டாக்டர்கள் அந்த மாணவியிடம் குழந்தை எங்கே என்று அந்த மாணவியிடம் விசாரித்த போது கழிவறை அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவியை சிகிச்சைக்காக அழைத்து வந்த பேராசிரியைகள் பதறிப்போய் ஆம்புலன்ஸ் உதவியுடன் கல்லூரிக்கு சென்று அங்கு குப்பை தொட்டியில் சிறு சிறு காயங்களுடன் இருந்த அந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.இதையடுத்து மாணவி மற்றும் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆடுதுறை அனைத்து மகளிர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவியும் அவரது உறவினரும் கடந்த சில ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். வயிறு பெரிதாக இருப்பது குறித்து வீட்டிலும், சக தோழிகளும் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி மழுப்பி வந்துள்ளார். இருப்பினும் கல்லூரிக்கு வந்த மாணவிக்கு பிரசவ வலி வந்துள்ளது. இதனால் அவரே கல்லூரி கழிவறையில் பிரசவம் பார்த்துள்ளார். மேலும் வெளியில் தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தான் பெற்றெடுத்த குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து குப்பைத் தொட்டியில் வீசிய தகவலும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் தற்போது வெளியில் தெரிய வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.