தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபநாட்களாக பொதுமக்களுக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வைரஸ் பாதிப்பு:
அப்போது, அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் பனிமூட்டம் என்பது வழக்கமாக மார்கழி முடிந்ததுமே சரியாகிவிடும். ஆனால், இன்னமும் கூட பிப்ரவரி மாதத்தில் தொடர்கிறது. காலையில் பனிமூட்டம் 7, 8 மணி வரை உள்ளது. பனிமூட்டம் காரணமாக வெப்பநிலை குறைவாக இருப்பதால் வைரஸின் தாக்கம் வைரஸின் வளர்ச்சி இந்த நேரத்தில் அதிகமாக உள்ளது.
ஆனால், ராஜீவ்காந்தி மருத்துவமனையைப் பொறுத்தவரை அதிகளவில் பாதிப்பு வரவில்லை. அனைத்து வசதிகளும் இருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக சோதிக்கிறார்கள். அதுபோன்று அவர்களுக்கு பாதிப்பு இருந்தால் அடுத்த கட்டத்திற்கு அனுப்புகிறோம்.
பாதிப்பு:
நேற்று எல்லாம் முதியவர்கள் யாருக்கும் ஒரு பாதிப்பு கூட கிடையாது. ஜனவரி மாதத்தில் 5,6 பேர் இருந்தார்கள். குறிப்பாக, குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு வைரல் தொற்று ஏற்பட்டால் கூடுதல் பாதிப்பு இருக்கும். அதாவது, 5 நாளில் சரியாக வேண்டியது 10 நாளில் சரியாகும்.
யார் ஒருவருக்கு எதிர்பாற்றால் குறைவாக இருக்கிறதோ குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் இவர்களுக்கு தொற்று ஏற்படும்போது தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கும். இதற்காகவே அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்துமா பாதிப்பு:
குழந்தைகளுக்கு இதயத்தில் தொற்று உள்ளது, அந்த குழந்தைகளுக்கு சளிப்பிரச்சினை வராமல் இருக்க வேண்டும், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை அதுபோன்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் 2 டோஸ் என்று அளிக்கப்படுகிறது.
தடுப்பு நடவடிக்கைகள்:
வைரஸ் தாக்குதலுக்கு ஏற்ப இந்த தடுப்பூசி ஆண்டுதோறும் மாறும். கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியை மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். இருமல், தும்மல் இருப்பவர்களிடம் அருகில் போகக்கூடாது. இருமினாலோ. தும்மினாலோ கைகளை மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும். காய்ச்சிய நீரை பருக வேண்டும்.
கூட்டமான இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வைரல் காய்ச்சல் என்றால் கண்ணில் தண்ணீர் ஊற்றுவது, மூக்கில் தண்ணீர் ஊற்றுவது, தொண்டை கரகரப்பாக இருப்பது, காது வலி, உடல் வலி இரண்டு நாட்களுக்கு அப்படி இருக்கும். அதன்பிறகு அப்படி இருக்காது. அதேநேரத்தில் திரவ உணவுகளை எடுத்து நன்றாக ஓய்வு எடுத்தாலே சரியாகும்.
மருத்துவ ஆலோசனை:
மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல் டானிக் பலவும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், மருத்துவர் ஆலோசனையுடன் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.