”இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத, திமுகவின் கட்டமைப்புக்கு அருகே கூட வர முடியாத விஜய்க்கு பதில் சொல்லி பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என அறிவுறுத்தல்”
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தமிழ்நாட்டில் தன்னுடைய அரசியல் எதிரி, திமுக-தான் என்று வெளிப்படையாக அறிவித்து அரசியல் செய்து வரும் நிலையில், திமுக பற்றியும் திமுக அரசு குறித்தும் அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு, தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எந்த பதிலையும் திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும், செய்தித் தொடர்பாளர்களும் தர வேண்டாம் என்று திமுக தலைமை அறிவுறுத்தியிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பாசிசம், பாயசம் என்று விமர்சித்த விஜய்
திமுகவை பாயசம் என்றும் பாஜகவை பாசிசம் என்றும் விமர்சித்து வரும் திமுக இருவரும் மறைமுக கூட்டணியில் இருப்பதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கட்சி தொடங்கி இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய் வைக்கும் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி அவருக்கான முக்கியத்துவத்தை திமுக நிர்வாகிகளே ஏற்படுத்தித் தரக் கூடாது என்பதற்காக இதுபோன்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எமெர்ஜென்சி, மிசாவை பார்த்த கட்சி
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, சமூகநீதிக்காக பல்வேறு உக்கிரமான கள போராட்டங்களை முன்னெடுத்து ஆட்சியை பிடித்த திமுக, சினிமா மூலம் மட்டுமே புகழ் வெளிச்சம் பெற்ற விஜயின் கருத்துகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் 2026 தேர்தலோடு காணாமல் போய்விடுவார் என்றும் திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டமைப்பு, தலைவர்கள் இல்லாத கட்சி
அதே நேரத்தில், விஜய் கட்சிக்கு பெரிய அளவில் 2ஆம் கட்ட தலைவர்களோ, கருத்தியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்தும் பேசி மக்களின் கவனத்தை ஈர்க்கும் பேச்சாளர்களும் இல்லையென்பதாலும், திமுகவிற்கு இருப்பதில் கால்வாசி கட்சி கட்டமைப்பை கூட தமிழக வெற்றிக் கழகம் பெற்றிருக்கவில்லையென்பதாலும் விஜயை ஒரு பொருட்காகவே கருத வேண்டாம் என்றும் திமுக தலைமையில் இருந்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரிய கட்சியை சீண்டி பெரிய ஆள் ஆக நினைக்கும் விஜய் ?
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் மிகப்பெரிய கட்சியான திமுகவை சீண்டி, அதன் மூலம் அரசியல் செய்து மக்கள் கவனத்தை பெறலாம் என்ற திட்டத்தில் விஜய் இருப்பதால், அவருக்கு எந்த வகையிலும் திமுக உதவிவிடக் கூடாது என்பதில் நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் விஜய் கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் பத்தோடு பதினோராவது கட்சியாக கருதி, அந்த கட்சிக்கு முக்கியத்துவம் ஏதும் கொடுத்து பெரிய ஆள் ஆக்கிவிட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
துரைமுருகன் பாணியை கடைபிடிக்க அறிவுறுத்தல் ?
ஒருவேளை, விஜய் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் சூழலும் ஏற்பட்டால், ‘யாரு அந்த விஜய்?’ என நக்கல் செய்து, அவரை துரைமுருகன் பாணியில் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து கடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.