பல லட்சம் கோடி கடனுக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மூலம் புதிய எம்.பிக்கள் அவசியமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்
மாநில அரசுகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
”பல லட்சம் கோடி கடன்” – தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “ஏற்கெனவே பல லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் கூடுதலாக வரும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம், குடியிருப்பு மற்றும் இதர வசதிகளுக்குச் செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் அவசியம் தானா? இன்றைய Digital மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் இன்னும் திறம்படத் தொடர்பில் இருப்பதே சாலச் சிறந்த அணுகுமுறையாக அமையும். ஜனநாயகத்தைக் காக்க எந்த ஒரு செலவும் பெரிய செலவு அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் அந்தச் செலவுகள் அவசியமானதாக இருக்க வேண்டும்.
எனவே நம் அரசியல் சாசனத்தின் பிரிவுகளைத் தக்கவாறு திருத்தி அமைத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இன்றி அது காலவரையின்றி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். அமெரிக்காவில் மக்களவைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 435 என நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “Equal population representation from each MP என்ற கோட்பாடு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இனியும் நீடித்தால் எந்த ஒரு பெரிய தீமையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை; இதுதான் இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கியக் காரணம் என்பதும் இல்லை.
மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்
ஜனநாயகக் கோட்பாடுகளை உளமாரக் காக்க விரும்பினால், ஒன்றிய அரசு கீழ்க்கண்டவற்றைத் தான் செய்ய வேண்டும்.
1.ஜனநாயகத்தின் ஆணி வேர் “சுதந்திரமான மற்றும் நியாயமான” தேர்தல் ஆகும் (free and fair elections). தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் Delimitation commissionஇல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரும் முக்கிய உறுப்பினராக இருப்பார். ஒன்றிய அரசு தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆணையர்கள் Delimitation commissionஇல் பாரபட்சம் இன்றிச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்படி வரும்?
2. நம் அரசியல் சாசனச் சட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய அரணாக விளங்குவது நீதித் துறை. அத்தகைய ஜனநாயக முக்கியத்துவம் வாய்ந்த நீதித் துறையில், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் போதிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். Collegium பரிந்துரைக்கும் அனைத்து நீதிபதிகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வதில்லை என்பதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். Delimitation commissionஇல் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை வகிப்பார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
”சுதந்திரமான விசாரணை அமைப்புகள்”
3.ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத் துறை, எந்த அச்சுறுத்தலும் இன்றிச் சுதந்திரமாகச் செயல்படும் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மேலும் CBI, IT, ED போன்ற புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், அரசியல் தலையீடு இன்றிச் செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும்.
4. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் கூட்டணி மற்றும் தேர்தல் கணக்குகளை விடுத்து. பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டு வர வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வரையறுக்கப்பட்ட நமது அரசியல் அமைப்புச் சாசனத்தில் “ஒன்றியத்தை” (அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்) பலம் பொருந்தியதாகவும், “மாநிலங்களைச் சற்று பலவீனமாகவும் பல விவாதங்களுக்குப் பிறகு தெரிந்தே அமைக்கப்பட்டிருக்கிறது. It was a conscious decision to adopt it as a federal constitution with an unitary bias. அது அந்த காலக்கட்டத்தின் தேவையாக உணரப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போது பல இடங்களில் பிரிவினைவாதப் போக்குகள் நிலவின என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழ்நிலையில் இந்தியத் திருநாடு தற்போது ஒரு முதிர்ச்சி அடைந்த மற்றும் நிலையான ஜனநாயகமாகப் பரிணமித்து விளங்குகிறது. India has evolved into a matured and stable democracy. குழந்தைகள் பெரியவர்களாக வளரும் வரையில்தான் பெற்றோர்களின் மேற்பார்வையும் கட்டுப்பாடுகளும் அவசியம். ஓரளவுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு, தேவையான சுதந்திரம் கொடுத்தால்தான் குடும்பம் ஒற்றுமையாக நிலைத்திருக்கும். அதேபோல் இன்றைய சூழ்நிலையில் மாநிலங்களுக்கு சுயாட்சியும், உரிய நிதிப் பகிர்வு மற்றும் நிதிச் சுதந்திரமும் வழங்குவதே இந்தியா என்ற கூட்டுக் குடும்பத்தை இன்னும் ஒற்றுமையானதாக நிலைத்திருக்கச் செய்யும் ஜனநாயக வழியாகும்.
ராஜ்யசபா எதற்கு?
5. இறுதியாக, நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை எதற்காக உள்ளது என்ற சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக லோக்சபா இருப்பது போல், மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்காக ராஜ்ய சபா இருக்கிறது. நிதி மசோதா தவிர்த்து மற்ற அனைத்து மசோதாக்களுக்கும் (உதாரணமாக CAA) மற்றும் அரசியல் சாசனச் சட்டத் திருத்தங்களுக்கும் மாநிலங்களவையின் ஒப்புதலும் அவசியமாகிறது. ஒரு கூட்டாட்சி அரசியலில் மக்களவையில் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவமும், மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவமும் வழங்குவதே சரியான முறையாகும். அமெரிக்கா போன்ற முன்னுதாரணமான கூட்டாட்சி நாட்டில் அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம் நாட்டில் மக்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் என்பது அடிப்படைக் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதே வேளையில் மற்ற நாடுகளுடன் முழுவதுமாக நம்மை ஒப்பிட முடியாது என்பதும் உண்மை. எனவே மாநிலங்களவையில் கூடுமானவரையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்துப் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்; அரசியல் சாசன வல்லுனர்களின் (constitutional experts) பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களவையில் உரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் எதிரி யார்?
இவற்றையெல்லாம் விடுத்து “equal population representation from each MP” என்ற போர்வையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறு சீரமைப்பை ஒன்றிய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற சூழ்நிலை உருவானால் அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்; மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தமிழகத்தின் நலனைக் காப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தீமையிலும் ஒரு நன்மை என்பது போல் இந்தத் தலையாய பிரச்சனையில் தமிழ்நாட்டின் நலனுக்காக யார் இருக்கிறார்கள்: தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இது உதவட்டும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்று Federalism எனப்படுகிற “கூட்டாட்சித் தத்துவ முறை” ஆதலால் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. இதுவே நம் அரசியல் சாசனத் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் செய்யும் உரிய மரியாதை ஆகும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அரசியல் வருகைக்குப் பிறகு விஜய் வெளியிட்ட மிக நீண்ட மற்றும் பல்வேறு விவகாரங்களையும், முக்கிய பிரச்னைகளையும் உள்ளடக்கிய ஒரு அறிக்கையாக இது அமைந்துள்ளது.