தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் மகளிருக்கான திட்டங்கள்:
ஒரு சமூகத்தில் வளர்ச்சி என்பதை அந்த சமூகத்தில் வாழும் பெண்களின் வளர்ச்சியை பொறுத்துதான் என்பது டாக்டர் அம்பேத்கரின் கூற்று. தமிழக அரசும் அதை நோக்கியே பல்வேறு நலத்திட்ட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் கோப்பிலேயே முதலாவதாக கையெழுத்திட்டார். அதைதொடர்ந்து, தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000, பள்ளி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தோழி விடுதிகள் என பெண்கள் வளர்ச்சிக்கு அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடைமுறைத்தி வருகிறது.
மகளிருக்கு மேலும் ஒரு சலுகை:
தமிழ்நாடு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில், மகளிர் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். இலவச பயண வசதி பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி உள்ளதாகவும், அடுத்தவரை சார்ந்து இருக்கும் சூழலை தவிர்க்க உதவுவதாகவும் அரசு தெரிவித்து வருகிறது. இதை குறிப்பிட்டு தனது தலைமையிலான அரசு, மகளிருக்கான அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டி வருகிறார். அதேநேரம், பெண்கள் கையில் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு இலவசம் பயணம் கிடையாது. எடைக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் தான், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கட்டணமின்றி இலவசமாக கொண்டு செல்லலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கண்காட்சிக்கான பொருட்கள், விளைபொருட்களை எடுத்துச் செல்ல உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்த, அவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்கேஜ் உடன் இலவசமாக பயணிக்கலாம்..!
போக்குவரத்துதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 100 கிலோ மிட்டர் தூரம் பயணிக்கும் பேருந்துகளில் 25 கிலோ வரையிலான பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கொண்டு செல்லும் லக்கேஜுக்கு கட்டணம் கிடையாது.
மகளிர் சுய உதவிக் குழு பெண்களை மரியாதை குறைவாக நடத்தாமல் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்களுக்கும், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள், பேருந்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக உள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என பயணிகளுக்கும் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
இது மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த உதவுவதோடு, கைகளில் பணம் சேரவும் ஊக்குவிக்கும். இதன் மூலம் பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை சுயமாகவே பூர்த்தி செய்துகொள்ள முடியும். அடுத்தவரை நாடவேண்டும் என்ற சூழலும் தவிர்க்கப்படும்.