திமுக தலைமயிலான தற்போதைய தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.
தமிழ்நாடு அரசு பட்ஜெட்:
மத்திய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் நாள் பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், இரண்டாவது நாளில் வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இதன் காரணமாக தமிழக அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையிலான, கவர்ச்சிகரமான திட்டம் ஏதேனும் இடம்பெறுமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி முழு பட்ஜெட்:
திமுக அரசு அடுத்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தாலும், தேர்தல் காரணமாக அது இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும். அதனால், அப்போது வெளியாகும் பட்ஜெட் பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் சந்தேகமே. அதனை கருத்தில் கொண்டு, இந்த முழு பட்ஜெட்டிலேயே வாக்காளர்களை கவரும் விதமான திட்டங்களை தமிழக அரசு அறிவிக்கக் கூடும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களை கவரும் விதமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், விவசாயத்திற்கான ஆதரவு என பல்வேறு அம்சங்களில் பட்ஜெட் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் பெரும்பாலனாவை நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், ஒரு சில மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார். அதேநேரம், மிகவும் முக்கியமான பல தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவே இல்லை எனவும், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்கிவிடுவோம் என அரசு பணியாளர் சங்கமும் எச்சரித்து வருகிறது.
நிலுவையில் உள்ள வாக்குறுதிகள்:
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து என கூறியதை, தங்களது கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தேர்வை ரத்து செய்வோம் என தற்போது விளக்கமளித்துள்ளது. இதுபோக,
- பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது
- பழைய ஓய்வூதிய முறை மீண்டும் அமல்படுத்தப்படும்
- மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பு
- கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்
- தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்களில் 75 சதவிகித வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என சட்டம் இயற்றப்படும்
- 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5.50 லட்சம் பணி இடங்களில் இளைஞர்களும், பெண்களும் பணியமர்த்தப்படுவார்கள்
- 30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள ரூ.2 குறைக்கப்படுமா?
- டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்
- நியாய விலைக்கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும்
- அரசுப்பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கைக்கணி வழங்கப்படும்
- அரசுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியில் உள்ள அனைத்து பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
என பல முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. அடுத்த ஆண்டு வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தொடங்கப்படும் ஆலைகளில் 75 சதவிகித வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே என்ற சட்டமாவது இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.