சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை – மும்பை அணிகள் இன்று 18வது சீசனில் ஆடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் கலீல் அகமது வேகத்தில் மிரட்ட, நூர் அகமது சுழலில் மிரட்ட சூர்யகுமார் யாதவின் 29 ரன்கள், திலக் வர்மாவின் 31 ரன்கள் உதவியுடன் தீபக் சாஹர் கடைசி கட்ட அதிரடியால் சென்னை அணி 156 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்தது.
ருதுராஜ் அதிரடி அரைசதம்:
இதையடுத்து, இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது. ஆட்டத்தை தொடங்கிய இம்பேக்ட் வீரராக வந்த ராகுல் திரிபாதி 2 ரன்னில் அவுட்டாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் – ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து பொறுப்பாக ஆடினார். குறிப்பாக, ரவீந்திரா நிதானமாக ஆட ருதுராஜ் அதிரடி காட்டினார்.
அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். இதனால், சென்னை அணியின் ரன் ரேட் ஏறியது. அதிரடி காட்டிய சென்னை கேப்டன் ருதுராஜ் 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். மின்னல் வேகத்தில் சென்ற சென்னை அணிக்கு எதிராக போல்ட், தீபக் சாஹர், சத்யநாராயண, சான்ட்னர், ஜேக்ஸ் என யாரையும் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை.
ஆட்டத்தை மாற்றிய விக்னேஷ்:
இதையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6வது பந்துவீச்சாளராக விக்னேஷ் புத்தூரை பயன்படுத்தினார். 2 கே கிட்டான விக்னேஷ் ஆட்டத்தையே மாற்றினார். அவரது முதல் ஓவரிலே அதிரடி காட்டிய கேப்டன் ருதுராஜை அவுட்டாக்கினார். அவரது சுழலில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த ருதுராஜ் வில் ஜேக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இவருக்கு பிறகு ஷிவம் துபே களமிறங்கினார். களமிறங்கியதும் ஒரு மிரட்டல் சிக்ஸரை விளாசினார். ஆனால், அவரது அதிரடி நீடிக்கும் முன்னரே அவரை விக்னேஷ் காலி செய்தார். அவரது சுழலில் 9 ரன்னில் பவுண்டரி எல்லையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஷிவம் துபே அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய தீபக் ஹுடாவையும் விக்னேஷ் தனது சுழலில் காலி செய்தார்.
காப்பாற்றிய ரவீந்திரா:
ஆனாலும், மறுமுனையில் ரவீந்திரா நிதானமாக தொடர்ந்து சென்னை அணிக்காக ஆடினார். அவர் ஓரிரு ரன்களாகவும், பவுண்டரிகளும் விளாச அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளிக்க வந்த சாம் கரணை வில் ஜேக்ஸ் போல்டாக்கினார். இதனால், 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சென்னை அணி.
சென்னை அணி வெற்றிக்கு 30 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜடேஜா – ரவீந்திரா ஜோடி சிங்கிள்களாக எடுத்தனர். 18 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரவீந்திரா சிக்ஸர் வீிக்னேஷ் ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை சென்னை பக்கம் கொண்டு வந்தார். இதனால், கடைசி 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா அவுட்டான நிலையில், முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கினார். இதனால், கடைசி 6 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை சான்ட்னர் வீசினார். ஆனால், ரச்சின் ரவீந்திரா சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரவீந்திரா கடைசி வரை அவுட்டாகாமல் 45 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 65 ரன்கள் எடுத்தார். இந்த சீசனை சென்னை அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தோனி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.