நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்க்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கு முன்னதாகவே ஷிஹான் ஹுசைனி, தனது உடலை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஹுசைனி காலமானார்
திரைப்படம் மற்றும் கராத்தே பயிற்சிகள் மூலம் பிரபலமான ஹுசைனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தான் உயிர் வாழ தினசரி 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது, நீண்டநாள் உயிர் வாழ முடியாது என அவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நள்ளிரவு 1.45 மணியளவில் ஹுசைனி (60 வயது) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடல் தானம்
முன்னதாக ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில், மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார். அவரது இந்த முடிவினை திரையுலகினரும், ரசிகர்களும் கனத்த இதயத்துடன் பாராட்டினர்.
சினிமாவில் ஹுசைனி
மதுரையை சேர்ந்த ஹுசைனி 1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பத்ரி படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்ததன் மூலம் நடிகரான பிரபலமானார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், ஹுசைனியின் நடிப்பு கவனம் ஈர்த்தது. தனியார் தொலைக்காட்சியிலும் இவரது கராத்தே பயிற்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதேபோல் அதிரடி சமையல் என்கிற பெயரிலும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சினிமாவை தாண்டி வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். நுற்றுக்காணக்கானோருக்கு இதுதொடர்பானபயிற்சிகளையும் அளித்துள்ளார்.
விஜய்க்கு வைத்த கோரிக்கை
மருத்துவமனையில் இருந்தபோது வெளியிட்ட வீடியோவில், “நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை பவன் கல்யாண் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டு சென்றார். அதேபோல் விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்” என ஷிகான் ஹுசைனி கோரிக்கை விடுத்து இருந்தார். அதேநேரம், திரைத்துறையினர் பலர் ஹுசைனியை மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்தாலும், விஜய் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவுகிறது.