டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு, அதிமுக- பாஜக கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர்.
இபிஎஸ் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் சாத்தியமாகியுள்ளதாக சொல்கின்றனர். டெல்லியில் நடந்த இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் கூட்டணி தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அண்ணாமலையுடன் இபிஎஸ்-க்கு இருக்கும் மோதலை கணக்கில் வைத்து டெல்லி பாஜக தலைமை அதனை சரிகட்ட ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.
இறங்கி வந்த இபிஎஸ்
அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்ட நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டெல்லிக்கு சென்று சந்தித்தது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று விடாப்பிடியாக இருந்த இபிஎஸ் தற்போது இறங்கி வந்துள்ளார். அண்ணாமலையால் கூட்டணி கெட்டு விடக் கூடாது என்பதால், பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி அவருடன் சைலண்ட் மோடுக்கு சென்றார். அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்பதில் அதிமுக கூட்டணியை மையமாக வைத்தே வானதி, நயினார் உள்ளிட்டோர் அண்ணாமலையுடன் ரேஸில் இருந்தனர்.
அதுவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ்-ம், டிடிவியும் பாஜக கூட்டணியில் இருப்பதே இபிஎஸ் யோசித்து வந்ததற்கு ஒரு காரணமாக இருக்கிறது. 2 பேரும் எங்கள் கூட்டணியில் தான் இருப்பார்கள் என்பதை அண்ணாமலை தெளிவாக சொல்லிவிட்டார். பிரிந்து சென்ற அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பத்தில் ஆரம்பம் முதலே தலையிட்டு வரும் அமித்ஷா, அதனை சாத்தியப்படுத்திவிட்டுதான் கூட்டணியை அமைக்கிறாரா? என்ற கேள்வி வந்தது.
முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்
ஆனால் அதற்கெல்லாம் இபிஎஸ் ஒத்துக் கொள்வதாக இல்லை என சொல்கின்றனர். அதனால் டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் என்பதை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலையே தொடர வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.
ஆனால் இபிஎஸ்- அண்ணாமலை இடையே மோதல் இருப்பதால் கூட்டணிக்குள் பூகம்பம் வெடிக்க கூடாது என்பதற்காக, கூட்டணி விவகாரத்தில் அதிமுகவை டீல் செய்வதற்காக தனியாக குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளனர். வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த குழு அமையவிருப்பதாக கூறப்படுகிறது. இருவருமே அதிமுகவினருடன் நெருக்கமான உறவில் இருப்பதால் தேவையற்ற வார்த்தை மோதலை தடுக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், டிடிவி-யுடன் இணைய முடியாது
அதேபோல் ஓபிஎஸ், டிடிவி-யுடன் இணைய முடியாது என்ற கண்டிஷனுடன்தான் இபிஎஸ் கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. பாஜக தலைமையிடம் இருந்தும் அதற்கு க்ரீன் சிக்னலே வந்துள்ளது. இருந்தாலும் ஓபிஎஸ்-ம், டிடிவியும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தொகுதி பங்கீடு, ஒரே மேடையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்டவற்றில் சுமூகமாக முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வி வந்துள்ளது.