டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு டென்ஷனான நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி உடையும் என்பதுபோல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக உடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு, இப்போது என்ன தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதாக என கேட்டு டென்ஷனானார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
கூட்டணி குறித்து என்ன கூறினார் இபிஎஸ்.?
டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள், இருமொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மட்டுமே பேசி, கோரிக்கை மனுவை அளித்ததாக, இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அரசியல் குறித்து என்ன பேசினீர்கள் என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, மக்கள் பிரச்னைகள் தொடர்பாக மட்டுமே பேசியதாகவும், அரசியல் பேசவில்லை என்றும், கழுவும் மீனில் நழுவும் மீனாக பதிலளித்தார்.
ஆனாலும் விடாத மற்றொரு நிருபர், அப்படியானால் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா என கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி, “ஏங்க, இல்ல..இருக்குதுன்னு… இப்ப என்ன எலெக்ஷனா நடக்குது.?“ என டென்ஷன் ஆனார். தொடர்ந்து, கடந்த இரண்டு முறையும் தேர்தல் நேரத்தில்தானே கூட்டணி குறித்து பேசினோம், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதா.?, எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் கூட்டணி அமைப்பார்கள் என்று கூறினார்.
தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி உடையும் என சூசகமாக கூறிய இபிஎஸ்
மேலும், கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.. எங்கள் கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும், ஆனால் தேர்தல் நேரத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும் என பதிலளித்தார். அதோடு, தேர்தல் கூட்டணி என்பது, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும் என்று கூறியதோடு, திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் அங்கேயே இருக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதனால், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்பதை அவர் சூசகமாகவே தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு, பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை கடைசி வரை அவர் கூறவே இல்லை. இதனால், அவர் அமித் ஷாவிடம் நிச்சயம் கூட்டணி குறித்தும் பேசியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.