ஹாரி புரூக் 55 பந்துகளில் சதமடித்து, இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றிபெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய மார்க் ரம் 26 பந்துகளில் 5 சிக்சர் உடன் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக், 55 பந்துகளில் சதமடித்து, இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார்.
20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அந்த அணி 20 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில், நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். அடுத்ததாக, ரிங்கு சிங் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். பின்னர், ஜெகதீசன் 36 ரன்களும், ஷர்துல் தாகூர் 12 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.