அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர்.
சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின் உள் விவகாரங்கள், வியூகங்கள் குறித்து பெங்களுர் அணியின் பவுலர் முகமது சிராஜிடம் கேட்டதாக, பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி ஆஸ்திரேலியாவிடன் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது, ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், தான் சூதாட்டத்தில் அதிக அளவில் பணத்தை இழந்ததால், முகமது சிராஜை வாட்ஸாப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த மெசேஜ்ஜில் அவர், தான் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்ததால் இந்திய அணியின் விவகாரங்களை தெரிவித்து தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மெசேஜ் வந்ததையடுத்து, முகமது சிராஜ் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புக் குழுவினரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, பிசிசிஐ சைபர் போலிசாரின் உதவியை நாடியது. அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர் என்பதும், சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால், பணத்தை மீட்க சிராஜிடம் உதவி கோரியதும் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் எந்த எந்த கும்பலுடனும் தொடர்பில் இல்லை என்பதும், அவர் மீது கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டுகள் இல்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.