விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது .
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 7 வருடங்களுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக படப்பிடிப்பை தொடர்வதற்கு சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் படத்தை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று ( நவம்பர் 24ஆம் தேதி ) படம் வெளியாகும் என இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் படத்தின் மீது இருக்கும் கடன் சிக்கல்களை முடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். முதலில் 120 கோடி ரூபாயாக இருந்த கடன் பிரச்னையை 80 கோடி ரூபாய் என்று அளவிற்கு கொண்டு வந்தார்.அதற்கான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை. கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கடன் கொடுத்தவர்கள் தங்களுக்கு கடனை திருப்பித் தராமலோ அல்லது அதற்கான உத்தரவாதத்தை வழங்காமலோ படத்தை வெளியிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்காக வழக்கும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதேசமயம் இந்த வெளியீட்டு தேதியை விட்டு விட்டால் வேறு நல்ல தேதி கிடைக்காது என்ற அச்சத்தில் இருந்த நிலையில் , நிச்சயம் இன்று படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் படத்தின் மீதான சிக்கல்கள் முடியவில்லை. தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரையரங்குகளும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. திரையரங்க உரிமையாளர்கள் துருவ நட்சத்திரத்தின் தயாரிப்பாளர் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.