சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.
அந்த அமோனியா திரவ வாயு தொழிற்சாலையில் உள்ள பெரிய கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. நேற்று அமோனியா வாயு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படவில்லை.
இருந்தபோதிலும் குழாயில் அமோனியா திரவ வாயு தேங்கியிருக்கும். இந்த நிலையில் நேற்றிரவு திடீரென இந்த குழாயில் சேதம் ஏற்பட்டு, குழாயில் தேங்கியிருந்த வாயு வெளியேறத் தொடங்கியது.
இதனால் வாயு காற்றில் கலந்து பரவத் தொடங்கியது. . இதனால் மக்களுக்கு வாந்தி மயக்கம், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மேலும், பெரிய குப்பம் மற்றும் அதன் அருகில் உள்ள மக்கள் பயத்தில் உரைந்து போனார்கள். பயந்து போன பொதுமக்கள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மூலம் உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டதாக தனியார் நிறுவனம் தெரிவித்தள்ளது.
இந்த சம்பவம் மிகப்பெரிய அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.