நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார். தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் ஸ்பெயின் சென்றார். ஸ்பெயினில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். ஸ்பெயினின் ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டு ஒப்பந்தமும், எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. ஸ்பெயினின் ரோகா நிறுவனமும் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் வாழ் தமிழர்களையும் சந்தித்து பேசினார்.இந்நிலையில், ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது. ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக்கிய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்தேன். ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன” என தெரிவித்தார்.
“தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை சர்வதேச நாளேடுகள் பாராட்டி உள்ளன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே அடுத்த வெளிநாட்டுப் பயணம் அமையும். நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன்…” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்த கேள்விக்கு, அவ்வளவு தொகுதிகள் தானா? மொத்தம் 543 தொகுதிகள் இருக்கே.. அவ்வளவு தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என சொன்னாலும் அச்சரியபடுவதற்கில்லை.” என தெரிவித்தார்.