பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனுவும் பெற்று வருகிறது. தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளையும் கைப்பற்றிட திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால், அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அலோசனை மேற்கொண்டார்.
அப்போது, தேர்தல் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 4,000க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுக்கு வந்திருக்கிறது. வரும் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும். பாஜகவின் அநீதிகள், கழக அரசின் சாதனைகள் பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடிமட்டத் தொண்டர் வரை அனைத்து விவரங்களும் தலைமைக்குத் தெரியும். தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை கழகத்திலும், அரசியலிலும் எதிர்பார்க்கலாம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பிறகு டி.கே.எஸ் இளங்கோவன் தீர்மானங்களை வாசித்தார்.