மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க 3 ராட்சத கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடி கொண்டிருந்தது அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அந்த சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆரோக்கியநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி, மறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.