தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனல் பறக்க வாக்கு சேகரித்ததனர். தமிழ்நாடு முழுவதும் அரசியல் களம் கடந்த ஓரிரு வாரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களின் வருகையால் பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரித்து காணப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக தமிழ்வேந்தன், 19 சுயேச்சைகள் உட்பட 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.