163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்க்ததில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்யா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் இறங்கினர். பொறுமையாக விளையாடிய ரஹானே 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும், ரவிந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுத்து வெளியேறினர். சமீர் ரிஸ்வி 21 ரன்கள் சேர்த்தார்.விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தார். 48 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.தோனி 11 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களும், ரிலீ ரூசோ 43 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். ஷஷாங்க் சிங் 25 ரன்களும், சாம் கரன் 26 ரன்களும் சேர்க்க 17.5 ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது.