“கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் சுதந்திரமான ஒரு முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என குறிப்பிட்டார்.
விசிக கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. திமுக அரசுக்கு எதிராக கூட்டணி கட்சியே போராட்டத்தை அறிவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. போதாக்குறைக்கு மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்ததும் பேசுபொருளானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.தொடர்ந்து கூட்டணி குறித்து பேசியதும் இப்போது சர்ச்சையாகியுள்ளது, திருவாரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் சுதந்திரமான ஒரு முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என குறிப்பிட்டார்.இப்படியான தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.