அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட நபர் கைது.
இந்நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு, நேற்றிரவு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை பிரிவான பி.என்.எஸ்.64 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியது.முதற்கட்டமாக, பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த அன்று பல்கலைக்கழகத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த, உயர் கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். மேலும் சென்னை காவல் ஆணையரை தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறிய கோவி. செழியன், தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பதாகக் கூறினார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் வெளி ஆட்கள் என்றும் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பவர் ஞானசேகரன் என்பதும், அவர் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சாலையோர பிரியாணி கடை நடத்திவரும் ஞானசேகரன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசேகரன் தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 23ஆம் தேதி தனிநபராக சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாக ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.