தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்கநாளை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜய் இன்று பல்வேறு தலைவர்களின் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
தலைவர்கள் சிலையை திறக்கும் விஜய்:
இரண்டாவது ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, சென்னை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சி கொள்கைத்தலைவர்களின் சிலையை விஜய் திறந்துவைக்க உள்ளார். அதில் தந்த பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகள் அடங்கும். கொடியேற்றி நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும், தேர்தலுக்கு தயாராகும் நோக்கிலும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பையும் விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயின் ஒரு வருட அரசியல் பயணம்:
திரைத்துறையின் உச்சநட்சத்திரமாக இருந்தபோது தினசரி பேசுபொருளாக இருந்த விஜய், அரசியல் பயணத்தை தொடங்கியது முதல் புதிய களத்திலும் விவாதப் பொருளாக தொடர்கிறார். அந்த வகையில் கடந்த ஓராண்டில் விஜயின் அரசியல் பயணம் எப்படி இருந்தது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
- கட்சி தொடங்கியதுமே தனது அரசியல் எதிரி திமுக தான் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தி, அரசியல் பயணத்தை தீவிரமாக்கினார்
- தமிழக வெற்றி(க்) கழகத்தின் பெயரில் ஒற்றுப்பிழை இருந்ததற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது
- அரசியல் கட்சிகள் அதைகொண்டு விமர்சிக்க, பிழைய திருத்தி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்ள தான் தயார் என்பதை விஜய் உறுதிப்படுத்தினார்
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கும் சமூக வலைதளங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்தார்
- அரசியல் தலைவர்களின் நினைவு நாளுக்கு வீட்டிலிருந்தபடியே அஞ்சலி செலுத்தினார்
- கள அரசியலுக்கு விஜய் வரமாட்டார், அவர் ஒரு வர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என பிரதான அரசியல் கட்சிகள் விமர்சித்தன
- குறிப்பிட்ட தேதியில் கட்சி மாநாட்டை கூட நடத்த முடியவில்லை, இவரெல்லாம் அரசியலுக்கு சரிவரமாட்டார் என எள்ளி நகையாடப்பட்டார்
- காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்தார்
- மாநாட்டில் உரையாற்றியபோது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என பகிரங்கமாக அறிவித்தார்
- தமிழக அரசியல் களத்தை திமுக Vs தவெக என மாற்றும் முயற்சிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்
- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை என பாஜக ஒருபக்கமும், அவர்களின் பி டீம் தான் விஜய் என திமுக ஒரு பக்கமும் தவெகவை கடுமையாக அட்டாக் செய்தது
- மறுபுறம் தனது பாணியில் இருந்து விலகியதால், தம்பி என குறிப்பிட்டு வந்த விஜயை, நாதகவின் சீமானும் கடுமையாக சாடி வந்தார்
- விஜய் பங்கேற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவால், திமுக கூட்டணியில் பெரும் குழப்பமே வெடித்தது
- விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டால் விசிகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்த ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்
- அதிமுக உடன் தவெக கூட்டணி என பேச்சு எழுந்தபோது, தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சி அமைப்பதே இலக்கு என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
- திமுக அரசில் நிகழும் ஒவ்வொரு தவறையும் தவறாமல் சுட்டிக் காட்ட தொடங்கினார்
- திமுகவினரின் கடும் விமர்சனங்களை தங்கள் பக்கம் திருப்பி, இனி அவர்களின் போட்டியாளர் தான் தான் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்
- கட்சியை வலுப்படுத்தும் விதமாக கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்
- விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் பரந்தூர் மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்து கள அரசியலை விஜய் தொடங்கினார்
- வேங்கைவயலுக்கு நேரில் செல்லவும் விஜய் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது
- அந்த நிலையில் தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேங்கைவயல் சம்பவம் தொடர்பான குற்றவாளிகளின் விவரங்களையே தமிழக அரசு வெளியிட்டது