காஷ்மீரில் நிலவிய பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட காஷ்மீரின் பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் எனவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்:
லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் சார்பில் நடைபெற்ற, “உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு” என்ற தலைப்பிலான விவாதத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது, காஷ்மீர் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், பிரிவு 370 நீக்கம் , பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதிக வாக்குப்பதிவு கொண்ட தேர்தல்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் பேசினார். சர்வதேச பொருளாதாரத்தில் டாலரைப் பயன்படுத்துவது குறித்து பிரிக்ஸ் நாடுகளின் கருத்துக்களையும் அவர் விளக்கினார்.
”காஷ்மீரும் – காத்திருப்பும்”
காஷ்மீர் தொடர்பாக பேசும்போது, “காஷ்மீரில், பெரும்பாலானவற்றை நாங்கள் சிறப்பாகச் சரிசெய்துள்ளோம். 370வது பிரிவை நீக்குவது ஒரு படி என்று நான் நினைக்கிறேன். பின்னர், காஷ்மீரில் வளர்ச்சி, பொருளாதார செயல்பாடு மற்றும் சமூக நீதியை மீட்டெடுப்பது இரண்டாவது படியாகும். மிக அதிகப்படியான வாக்குப்பதிவுடன் நடத்தப்பட்ட தேர்தல் மூன்றாவது படியாகும். நாங்கள் காத்திருக்கும் பகுதி, சட்டவிரோத பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் திருடப்பட்ட பகுதியைத் திரும்பப் பெறுவது என்று நான் நினைக்கிறேன். அது முடிந்ததும், காஷ்மீர் பிரச்னகள் முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என ஜெய்சங்கர் பதிலளித்தார்.
அமெரிக்கா உடனான உறவு:
மேலும், ”ட்ரம்பின் கீழ் அமெரிக்க நிர்வாகம் இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போகும் பன்முகத்தன்மையை நோக்கி நகர்கிறது என்றும் ஜெய்சங்கர் கூறினார். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் தேவை குறித்து இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் கூறினார் . பன்முகத்தன்மையை நோக்கி நகர்ந்து வரும் ஒரு அதிபரையும், நிர்வாகத்தையும் காண்கிறோம் என்றும், அது இந்தியாவுக்குப் பொருத்தமான ஒன்று” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கட்டணங்களைப் பொறுத்தவரை, ”கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்காக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வாஷிங்டனில் இருப்பதாக” ஜெய்சங்கர் கூறினார். “நாங்கள் அதைப் பற்றி மிகவும் திறந்த உரையாடலை நடத்தினோம் (கட்டணங்கள்) அந்த உரையாடலின் விளைவாக இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் அவசியத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று அவர் கூறினார்.
சீனாவுடனான இந்தியாவின் உறவு,
தொடர்ந்து, “உலகில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளான, எங்களுக்கும் சீனாவுக்கும் இடையே மிகவும் தனித்துவமான உறவு உள்ளது. எங்கள் நலன்கள் மதிக்கப்படும், உணர்திறன்கள் அங்கீகரிக்கப்படும் மற்றும் எங்கள் இருவரின் வேலைகளும் மதிக்கப்படுவதை விரும்புகிறோம்” என்று ஜெய்சங்கர் கூறினார். இரு நாடுகளுடனும் இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்த மார்ச் 4 முதல் 9 வரை ஜெய்சங்கர் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.