திமுக தலைமையிலான அரசை 2026ல் மாற்றுவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்,
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்,
விஜய் வாழ்த்து:
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் என அனைவருக்கும் இந்த நாளில் வாழ்க்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம் தானே?
திமுக அரசை சாடிய விஜய்:
பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, பாதுகாப்பின்மையை உணரும்போது சந்தோஷம் இருக்காது தானே? அப்படி என நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்வது, நீங்க, நான் என எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம். ஆனால், அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என இப்போது தானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக்கூடியது தானே. மாற்றக்கூடியது தானே. கவலைப்படாதீங்க. 2026ல் நீங்க எல்லாரும் சேர்ந்து இல்லை நாம் எல்லாரும் சேர்ந்து, மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினத்தன்று நாம் அனைவரும் சேர்ந்து உறுதியேற்போம். ஒன்று மட்டும் சொல்கிறேன். எல்லா சூழல்களிலும் உங்களுடைய மகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும், தோழனாக உங்களோடு நான் நிற்பேன். நன்றி, வணக்கம் ” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
”திமுக” பெயரை உச்சரித்த விஜய்
விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கிவிட்டது. அதன்பிறகு கட்சி மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, இரண்டாமாண்டு தொக்க விழா என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால், அத்தனை இடங்களில் மாநில அரசு, ஆளுங்கட்சி, அரசியல் எதிரிகட்சி என்று மட்டுமே திமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு வந்தார். ஒருமுறை கூட அவர் திமுக எனும் பெயரை பொதுவெளியில் உச்சரிக்காமல் இருந்தார். இதுவே அவர் மீது பெரும் விமர்சனமாக இருந்தது. இந்நிலையில், முதல்முறையாக திமுக என பெயர் குறிப்பிட்டு, அவர்களது தலைமையிலான அரசை மாற்றுவோம் என விஜய் குறிப்பிட்டுள்ளார். அவரது அரசியல் நகர்வுகளில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வீடியோவை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். விஜயை யாரும் பெரிதாக பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என, அண்மையில் திமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான், திமுக மீதான நேரடி தாக்குதலை விஜய் தொடர்ந்துள்ளார்.