மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை போலீசார் கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை போலீசார் கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மகளிர் தினத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி தவெகவினர் போராட்டட்தில் ஈடுபட்டனர்.
சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் தவெகவினர் போராட்டம் நடத்தியதால் போலீசார் கலைந்து போக சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதை மறுக்கவே அவர்களை போலீசார் கைது செய்ததாக தெரிகிறது.
இதனிடையே மகளிர் தினத்தில் வீடியோ வெளியிட்ட விஜய், “இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் என அனைவருக்கும் இந்த நாளில் வாழ்க்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம் தானே?
பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, பாதுகாப்பின்மையை உணரும்போது சந்தோஷம் இருக்காது தானே? அப்படி என நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்வது, நீங்க, நான் என எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம். ஆனால், அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என இப்போது தானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக்கூடியது தானே. மாற்றக்கூடியது தானே. கவலைப்படாதீங்க. 2026ல் நீங்க எல்லாரும் சேர்ந்து இல்லை நாம் எல்லாரும் சேர்ந்து, மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினத்தன்று நாம் அனைவரும் சேர்ந்து உறுதியேற்போம். ஒன்று மட்டும் சொல்கிறேன். எல்லா சூழல்களிலும் உங்களுடைய மகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும், தோழனாக உங்களோடு நான் நிற்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.