எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்தது கிடையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்தது கிடையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளில் தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது.
திமுக கூட்டணிக் கட்சிகள் கிட்டத்தட்ட அப்படியே நீடிக்கும் என்ற நிலை இருந்தாலும் புதிய கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ள நிலையில் விறுவிறுப்பு கூடியுள்ளது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்த நிலையில் தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளது. தேமுதிக அதிமுகவுடன் தான் கூட்டணி தற்போது தொடர்கிறது என சொல்லியுள்ளது.
தவெகவுடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்புவதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் விஜயும் திமுக பாஜக, நாம் தமிழர் கட்சியை சாடினாலும் அதிமுக மீது சாஃப்ட் கார்னர் இருப்பதாக பேசப்படுகிறது. இதனால் தவெக அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என பேசப்பட்டது.
இதனிடையே பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அண்ணாமலை முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி மகனை பிடித்து அமித்ஷாவிடம் பேசவைத்துள்ளார் அண்ணாமலை. அதனால் மீண்டும் கூட்டணி மலருமோ என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதுமட்டுமல்லாமல் எஸ்.பி வேலுமணி இல்ல திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதில் இபிஎஸ் கலந்து கொள்ளாதபோது பாஜக தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலையுடன் அதிமுக தலைவர்கள் கூடி குலாவினர். இதனால் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி மலர வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, “திமுகவை வீழ்த்த அதிமுக தயாராக இருக்கிறது. திமுக மட்டும் தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எங்களுக்கு எதிரி இல்லை. திமுகவை வீழ்த்துவதுமட்டும்தான் எங்களுக்கு குறிக்கோள்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை “பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி; பா.ஜ.க. நோட்டா கட்சி; பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். பாஜக இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை” என பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இபிஎஸ், “அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டாரா? கூட்டணி பற்றி 6 மாதங்களுக்கு பிறகுதான் முடிவு என தெளிவாக சொல்லிவிட்டேன். அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை எந்த கட்சிக்காகவும் கூட்டணிக்காக தவம் கிடந்ததாக சரித்திடம் கிடையாது” எனத் தெரிவித்தார்.