அதிமுக வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார்
திருச்சி அதிமுகவினர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது எனவும் இதுதான் கடைசி எச்சரிக்கை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதிமுக வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார்.
அதிமுக நிர்வாக ரீதியாக 82 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இபிஎஸ் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, கட்சி நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் தேர்தல் அறிவுரைகள் குறித்தும் உரையாடி வருகிறார். அதோடு கட்சியினர் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது திருச்சி நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி அதிமுக நிர்வாகிகள் உள்ளூர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது. திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள். ஜெயலலிதா இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இனியும் திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு கடைசி எச்சரிக்கை.” எனத் தெரிவித்தார்.
அதுவரை அமைதியாக பேசிக்கொண்டிருந்த இபிஎஸ் திருச்சி பெயரை கேட்டதும் டென்ஷன் ஆகிவிட்டார்.
”அதிமுகவுக்கு நிர்வாகிகள் உழைக்க வேண்டும். திமுகவினரோடு தொடர்பில் இருப்பதை நிறுத்த வேண்டும். திருச்சி மீண்டும் அதிமுகவின் கோட்டையாக மாற வேண்டும். ஏனென்றால் அங்கு 2011, 2016 தேர்தலில் அவ்வளவு தொகுதிகள் வென்று காட்டியுள்ளோம்.
தற்போது திமுகவினரோடு கைகோர்த்து இருப்பதால் அதிமுக முறையாக செயல்படவில்லை என தெரிகிறது. இதுதான் கடைசி எச்சரிக்கை.
அதிமுகவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. பூத் கமிட்டி வேலை எப்படி போகிறது. எவ்வலவு உறுப்பினர்களை சேர்த்துள்ளீர்கள். இளைஞர்களை அதிகப்படியாக சேர்க்கும் வழியை பாருங்கள். அப்போதுதான் 2026ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய திருச்சி அதிமுக நிர்வாகிகள், நாங்கள் சிறப்பாக செயலாற்றி அதிமுகவை 2026ல் வெற்றி பெற வைப்போம் என உறுதியளித்தனர்.