பாஜக தமிழ்நாடு தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கும் சீனியர்களுக்கு, தலைமை ஒரு டாஸ்க் கொடுத்துள்ளதாம். அதற்காக, இபிஎஸ்ஸிடம் சரண்டராகியுள்ளார் பாஜகவின் ஒரு முக்கிய புள்ளி.
பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு ப்ரமோஷன் கொடுத்துவிட்டு, அடுத்த தலைவராக நயினார் நாகேந்திரனை நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதற்கு நயினார் முக்கிய அசைன்மெண்ட் ஒன்றை முடித்துக் கொடுக்க வேண்டும் என பாஜக தலைமை நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சராகும் அண்ணாமலை.?
தமிழ்நாட்டில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் ஓயாத நிலையில், மீண்டும் அண்ணாமலையே தொடர்வார் என சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது நடந்துள்ள அரசியல் மாற்றங்களையும், வரும் 2026 தேர்தலையும் கருத்தில் கொண்டு, பாஜக தலைமை சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாம்.
அதன்படி, அண்ணாமலையை மத்திய அமைச்சராக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலையின் தலைவர் பதவியை யாரிடம் கொடுப்பது என்பதில் பாஜக தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் என பலரும் ரேஸில் உள்ளனர். அனைவரும் அவரவர் தரப்பில் இருந்து மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைமை அவர்களுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அதிமுக பாஜக கூட்டணியை சக்ஸஸ் செய்து கொடுப்போருக்கு பதவி என தலைமை அறிவித்துள்ளதாம். கடந்த 2021 தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக சந்தித்தது. ஆனால், பின்னர் அண்ணாமலை, ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணி முறிந்தது.
வரும் 2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என ஈபிஎஸ் முரண்டு பிடித்து வந்தார். அதே நேரத்தில், அண்ணாமலை தலைவராக இருக்கும் வரையில் அது நடக்காது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளன. கூட்டணியே இல்லை என பேசி வந்த இபிஎஸ், 6 மாதத்திற்கு பிறகு தெரியும் என தனது முடிவில் இருந்து மாறி வந்துள்ளார். மேலும், அதிமுகவினர் பலரும் பாஜகவினருடன் நெருக்கம் காட்டிவரும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல், இபிஎஸ்ஸை கூல் செய்யும் வகையில் அண்ணாமலையும் தலைவர் பதவியில் இருக்கமாட்டார், அதே சமயம் அவருக்கும் மத்திய அமைச்சராக ப்ரமோஷன் கொடுத்து விடலாம் என பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இபிஎஸ் உடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த நயினார் தான் சரியான தேர்வு என எண்ணிய பாஜக, அவரை வைத்தே இந்த டீலை முடிக்க திட்டமிட்டுள்ளது.
இபிஎஸ்ஸிடம் சரண்டரான நயினார் நாகேந்திரன்
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற எஸ்பி வேலுமணியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இபிஎஸ், விமான நிலையத்தில் நயினாரை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் அரை மணி நேர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
மேரும், அந்த சந்திப்பின்போது “எப்போது பாஜக தலைவர் ஆவீர்கள்?” என்று எடப்பாடி பழனிசாமி நயினாரிடம் கேட்டதாகவும், அதற்கு, ”உங்க கையில தான் அண்ணே எல்லாம் இருக்கு, நீங்க மனசு வச்சா சீக்கிரமாவே தலைவர் ஆகிரலாம்” என்று நயினார் கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு, “திமுகவுக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமா இருக்கு, அனைவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால் நல்லா இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் விருப்பம் தெரிவிக்க, எடப்பாடி பழனிசாமியும் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை கூட்டணி இல்லாமல் சந்திப்பது, அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆபத்தான ஒரு விஷயம்தான். என்னதான் திமுகவிற்கு எதிர்ப்பு அலைகள் இருந்தாலும், எதிர் தரப்பில் வலுவான ஒரு கூட்டணி இல்லாவிட்டால், நிலைமை திமுகவிற்கே சாதகமாக முடிந்துவிடும். அதனால், பாஜக தலைமை எடுத்துள்ள இந்த நகர்வு சரியானதாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.