திருச்சி: டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் இருந்து மெல்ல நகரும் டிட்வா புயல் இன்று (நவ.29) டெல்டா பகுதியில் செயலிழக்கும்.
இன்றும், நாளையும் டெல்டா மாவட்ட கடற்கரையையொட்டி சில மணி நேரம் நீடித்து, பிறகு மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து நாளை புதுச்சேரி- மாமல்லபுரம் இடையே மேலும் செயலிழந்து கரையை கடக்கும்.
இதன் காரணமாக இன்றும், நாளையும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்.