சென்னை:
சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன.
சென்னையில் பெய்த மழையானது, பெருத்த அதிர்ச்சியையும், இழப்பையும் தந்துவிட்டு போயுள்ளது.. அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும்கூட, பாதிப்புகளிலிருந்து சென்னை மீண்டுவருவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்கிறார்கள்.
எவ்வளவுதான் கட்டுமான பணிகள், வடிகால்வசதிகளை அரசு முன்னெடுத்தாலும்கூட, முழுமையாக அவற்றை சரிசெய்ய முடியாது. இதற்கு பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் தேவையாக இருக்கிறது.
எச்சரிக்கை:
அந்த வகையில், பிளாஸ்டிக் கழிவு + மழைநீர் சேகரிப்பு என்ற இந்த 2 விஷயத்திலும் தீவிர கவனத்தை மக்கள் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீடுகளை கட்டுகிறார்கள்.. ஆனால், மழைநீர் சேகரிப்பு என்பது பெயரளவுக்கு, கணக்கு காட்டுவதற்காக மட்டுமே உள்ளது.. இதனால், மழைநீரை முழுமையாக சேகரிப்பதில்லை.. மழைநீரை நிலத்துக்குள் அனுப்பும் முயற்சியையும் எடுப்பதில்லை.
அப்பார்ட்மென்ட்:
அடுக்குமாடி குடியிருப்புகளே இப்படி என்றால், தனி வீடு வைத்திருப்பவர்கள் நிலையும் இப்படித்தான்.. எனவே, ஒரு அப்பார்ட்மென்ட்டில் 200 வீடுகள் இருக்கிறதென்றால், அதில் 200 வீட்டுக்குமே தனித்தனியாக ஒரு மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும்.. இதையும் சம்பந்தப்பட்ட வீட்டு ஓனர்களே பராமரிக்க வேண்டும்..
அப்படியிருந்தால்தான், இனிவரும் புயல், மழையை சமாளிக்க முடியும் என்கிறார்கள். நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகரித்து வருகின்றன.. தற்போது தேங்கி நிற்கும் மழைநீரில், கழிவுநீர் அமைப்புகளில் பாதிக்கும் மேல், பிளாஸ்டிக் கழிவுகள் தான் அடைத்து கொண்டிருக்கிறது… இதன் பாதிப்பு வருங்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்..
கழிவுகள்:
கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்றாலும், கழிவுகளை அகற்றும் பணியை வீட்டிலிருந்து நாமே முதலில் துவக்க வேண்டும்.
எனவே, பிளாஸ்டிக் இல்லாத சமூகம் + மழைநீர் சேகரிப்பு இவை இரண்டும் இருந்தாலே, மழை நீரை நிலத்தினுள் செலுத்த முடியும்.. அப்போதுதான், அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்… அப்போதுதான் வருங்கால தலைமுறை தப்பிக்கும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க, குழாயிலிருந்து 3 அடி தூரத்திற்கு கிட்டத்தட்ட, 3 அடி விட்டம் உள்ள 4 அடி ஆழமுள்ள ஒரு குழி தோண்ட வேண்டும். அதில் கூழாங்கற்களையும், ஆற்று மணலையும் அடுக்குகளாக போட்டு, அந்த குழிக்குள் வீட்டு மாடியிலிருந்தோ அல்லது கூரையிலிருந்தோ வரும் மழைநீரைக் குழாய்கள் மூலம் இந்த தொட்டிக்குள் திருப்பிவிட வேண்டும். இதனால் மழைநீர் வீணாகாது.. நிலத்தடி நீரும் வற்றாது.
சேமிக்கலாம்:
இல்லாவிட்டால், அப்பார்ட்மென்ட் போன்ற குடியிருப்புகளில், கொள்கலனில் சேமித்து வைக்கலாம்.. நிலத்திற்கு அடியிலேயே அல்லது நிலமட்டத்துக்கு மேலேயே, பெரிய தொட்டி போல அமைத்து அனைத்து வீடுகளிலும் குழாய்கள் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி வடிகட்டி சேகரிக்கலாம். போர்வெல்லிலும் கூட சேமிக்கலாம்… !