சென்னை:
சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் மண்டலம் வாரியாக 369 பாயிண்ட்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை அகற்றி வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு 25 பாயிண்ட் அளவில் மழைநீர் வடிகிறது. எங்களுக்கு சவாலாக உள்ள பகுதியாக பள்ளிக்கரணை, பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகள் உள்ளன.
சென்னைக்குள் ராயபுரம், பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, சடையங்குப்பம், கொரட்டூர், பெரம்பூர், ஜமாலியா பகுதிகள் உள்ளன.
சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி எல்லையில் 955 மோட்டார்கள் இயங்கி கொண்டிருக்கிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட 90 மோட்டார்களும் நீரை அப்புறப்படுத்தி வருகின்றன. இதில் அதிக உந்துதிறன் கொண்ட 52 மோட்டார்கள், 100 எச்.பி.மோட்டார்கள், 50 எச்.பி. மோட்டார்களும் இயங்கி கொண்டிருக்கிறது.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் ஒரு வேளைக்கு 4 லட்சம் பேர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.
15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 85 சதவீத இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் தண்ணீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.