“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.”
ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல்போன பைக்கை, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாகக் கூறி அபராதம் கட்ட வலியுறுத்தி, போலீஸிடமிருந்து விருத்தாசலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு வந்த மெசேஜ் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருட்டுப்போன பைக்கை, போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவதாகக் கூறி அந்த விவசாயி தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள வேட்டைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (40) என்ற விவசாயி. இவர் கடந்த 2018-ல் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கை வாங்கி ஓட்டிவந்திருக்கிறார். சிவப்பு நிறம்கொண்ட அந்த பைக்கின் பதிவு எண் டி.என்.91, டி.1143. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு, டிசம்பர் 10-ம் தேதி இரவு சாவடிக் குப்பத்திலுள்ள தன் சகோதரர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு, இரவு அங்கேயே தங்கியிருக்கிறார். இதையடுத்து மறுநாள் காலை பார்த்தபோது அவருடைய பைக்கைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் தனது பைக் திருட்டுப்போனதாகக் கூறி, விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து ரசீது கொடுத்ததுடன்,
விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் வெற்றிவேலின் செல்போனுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் சென்றதற்காக ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என நாகப்பட்டினம் போலீஸிடமிருந்து வந்த மெசேஜ் வெற்றிவேலுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து வெற்றிவேல், தன் நண்பர்களுடன் சேர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தனது பைக்கைத் தேடியிருக்கிறார்.அந்த நிலையில், போலீஸ் ஒருவர் தன் பைக்கைப் பயன்படுத்திவருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தனது பைக்கைத் திருடியவர்கள் மீதும், தன் பைக்கைப் பயன்படுத்திவந்த போலீஸ் மீதும் நடவடிக்கை எடுத்து, தன் பைக்கை மீட்டுத் தர வேண்டும் என தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கயல்விழியிடம் அவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வெற்றிவேல் கூறியதாவது, “ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல்போன பைக்கை ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாகக் கூறி, அபராதம் செலுத்த வலியுறுத்தி போலீஸிடமிருந்து மெசேஜ் வந்தது. இதைத் தொடர்ந்து திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் சுரேஷ் என்பவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது.போலீஸ் என்பதால் பயந்துபோன நான், என் பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை. இதையடுத்து திருட்டுப்போன எனது பைக்கை உடனே மீட்டுத்தர வேண்டும். திருடிச் சென்றவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருட்டு வாகனத்தைப் பயன்படுத்திய போலீஸ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனது பைக்கை போலீஸ் பயன்படுத்திவரும் போட்டோ ஆதாரத்துடன் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.