வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல்:
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழ்நாடு – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும் இந்த புயல் காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் இன்று முதல் 10 ஆம் தேதி வரை மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை எப்போது?
மாண்டஸ் புயல் காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.