கோவை:
கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு சுப்பிரமணி வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் தங்கமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை நடந்த அன்று இரவு தங்கமணியின் உறவினரான சுக்கிரமணி கவுண்டர்புதூரை சேர்ந்த கன்னியப்பன் (29) என்பவர் தனது நண்பர் சுதாகருடன் (30) வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் மைல்கல் பகுதியில் இவர் நிற்பதாக வந்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று கன்னியப்பனையும், அவரது நண்பரையும் பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் தங்கமணியை கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் கன்னியப்பன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் சுக்கிரமணி கவுண்டர்புதூரில் மளிகை கடை நடத்தி வருகிறேன். தங்கமணி எனது தூரத்து உறவினர் ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் அவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். அதற்கு உரிய வட்டி மற்றும் அசலை நான் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் எனக்கு காரமடை அருகே குமரன்குன்று பகுதியில் வசிக்கும் தச்சுத்தொழிலாளியான சுதாகருடன் நட்பு ஏற்பட்டது. அவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே அவர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கூட கட்ட முடியவில்லை. எனக்கு பணம் கேட்டு உதவுமாறு கேட்டார். ஆனால் அவர் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை.
ஏனென்றால் நானும் கடைக்கு வாடகை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். அப்போது தான் நான் அவரிடம் நமது 2 பேருக்கும் பணம் தேவைப்படுகிறது. எனது உறவினரான தங்கமணி என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அவரிடம் சென்று கேட்கலாம் என தெரிவித்தேன். அதன்படி நாங்கள் 2 பேரும் சம்பவத்தன்று தங்கமணியின் வீட்டிற்கு சென்றோம். அவரிடம் எங்களுக்கு கடனுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டோம்.
ஆனால் நான் ஏற்கனவே வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் அவர் எங்களுக்கு பணம் கொடுக்க மறுத்து வீட்டை விட்டு வெளியில் செல்லுமாறு கூறினார். இதனால் எங்களுக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இனி இவரிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை. வீட்டில் புகுந்து அவரை கொன்று கொள்ளையடித்து விடலாம் என முடிவு செய்தோம். அதற்காக அவரது கணவர் எப்போது வெளியில் செல்வார் என தொடர்ந்து கண்காணித்தோம்.
நாங்கள் எதிர்பார்த்தது போலவே சுப்பிரமணி வெளியில் சென்றுவிட்டார். பின்னர் நானும், எனது நண்பரும் வீட்டிற்குள் சென்றோம். அங்கு தங்கமணி தனியாக இருந்தார். அவரிடம் எங்களுக்கு பசிக்கிறது. சாப்பாடு தர முடியுமா என கேட்டோம். அவரும் வீட்டிற்குள் அழைத்து சாப்பாடு கொடுத்தார். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது தாகம் எடுக்கவே தண்ணீர் கேட்டோம். தங்கமணியும் தண்ணீர் எடுப்பதற்காக சமையலறைக்கு சென்றார்.
இதுதான் சமயம் என நினைத்த நாங்கள், சாப்பாடை அப்படியே வைத்து விட்டு, கையில் கையுறைகளை அணிந்து கொண்டு அவரை பின் தொடர்ந்து சென்றோம். நாங்கள் பின்னால் வருவதை பார்த்த தங்கமணி சத்தம் போட முயன்றார். உடனே அவரது வாயை நான் பொத்தினேன். எனது நண்பர் சுதாகர், தான் கையில் வைத்திருந்த உளியால் அவரது கழுத்தில் குத்தினார். இதில் தங்கமணி சரிந்து விழுந்தார்.
பின்னர் நான் வீட்டில் இருந்த தலையணையை எடுத்து, முகத்தில் வைத்து அழுத்தினேன். அப்போது அவர் சத்தம் போட்டார். அந்த சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க வீட்டில் இருந்த டி.வியை ஆன் செய்து, சத்தத்தை அதிகமாக வைத்தேன். சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். அவர் இறந்ததை உறுதி செய்ததும் நாங்கள் அவர் அணிந்திருந்த கம்மல், மோதிரத்தை திருடினோம். பின்னர் வீட்டில் பணம் இருக்கிறதா? என்பதை அறிய பீரோவை திறந்து பார்த்தோம். ஆனால் அதில் பணம் இல்லை.
நான் கடன் வாங்குவதற்காக எழுதி கொடுத்திருந்த பத்திரம் உள்பட ஏராளமான பத்திரங்கள் இருந்தது. இதனால் அந்த பத்திரங்களை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டோம். அன்னூர் சொக்கம்பாளையம் பகுதியில் உள்ள குட்டைக்கு சென்று நாங்கள் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி வீசி விட்டு, பத்திரங்களை தீ வைத்து கொளுத்தினோம். பின்னர் குன்னூர் தப்பி செல்வதற்காக மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட பெட்ரோல் பங்கிற்கு வந்த போது போலீசாரிடம் சிக்கி கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்