கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான்தான் என நடிகர் விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாக உள்ள கடைசி படம் ஜனநாயகன். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளுக்கு மத்தியில் ஜனநாயகன் படத்தின் பணிகளையும் விஜய் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், விஜய் கடந்த 2019ம் ஆண்டு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சூர்யா நடித்த ஆதவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2009ம் ஆண்டு நடந்தது. இதில் பங்கேற்ற விஜய்,
டாப் கியர் ஹீரோ சூர்யா:
இன்று தமிழ் சினிமாவில் நம்ம சூர்யா டாப் கியரில் போய் கொண்டிருக்கும் ஹீரோ. தன்னைத்தானே வருத்திகிட்டு நடிக்குறாரு அவருக்கு என்னோட வாழ்த்துகள். கே.எஸ்.ரவிக்குமார் சார் தசவாதாரத்திற்கு பிறகு எந்த படம் பண்ணாலும் எதிர்பார்ப்பு உண்டாகிடும். சில ஷாட் தசாவதாரம் படத்துல எப்படி பண்ணாருனே தெரியல. என்ன வேணும்னாலும் நாம யோசிக்கலாம்.
செட் ஆகாத ஒரே ஹீரோ விஜய்:
காட்சியா கொண்டு வர்றது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை அந்த படத்துல ரொம்ப ஃபெர்பெக்டா பண்ணிருந்தாரு. எனக்கு தெரிஞ்சு 15, 16 வருஷம் உச்சத்துல இருக்குற ஒரே டைரக்டர் அவரு மட்டும்தான்னு நினைக்குறேன். அவருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான் மட்டும்தான்னு நினைக்குறேன். நாம மறுபடியும் பண்ணி ஒரு ஹிட் கொடுக்கனும் சார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிக்கு முத்து, படையப்பா படங்களையும், கமல்ஹாசனுக்கு அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவாதாரம் ஆகிய படங்களையும், அஜித்திற்கு வில்லன், வரலாறு ஆகிய படங்களையும் வெற்றிப் படங்களாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, சரத்குமார், தெலுங்கு நடிகர் பாலய்யா என பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
மின்சார கண்ணா தோல்வி:
அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக என தொடர் ப்ளாக்பஸ்டர் படங்களை வருடத்திற்கு ஒன்றாக தந்து கொண்டிருந்த நிலையில் படையப்பா எனும் மாபெரும் வெற்றிப்படத்தை ரஜினிகாந்தை வைத்து தந்தார். ரஜினியை வைத்து இந்த படத்தை இயக்கிய பிறகு அவர் இயக்கிய படம் மின்சார கண்ணா.
மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டிருந்த விஜய்யை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கிய அந்த படத்தின் பாடல்கள் தேவாவின் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குடும்ப படமான அந்த படம் இன்று தொலைக்காட்சிகளில் ரசிக்கப்பட்டாலும் அன்று திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
மீண்டும் இணையாத கூட்டணி:
மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சுமாரான வெற்றியே பெற்றது. இதை குறிப்பிட்டே நடிகர் விஜய் கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான்தான் என்று பேசியுள்ளார். அதன்பிறகு நடிகர் விஜய்யும், கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து எந்த படத்திலும் பணியாற்றவில்லை. 2019ம் ஆண்டு பாலய்யாவை வைத்து ரூலர் படத்தை எடுத்த பிறகு கே.எஸ்.ரவிக்குமார் எந்த படத்தையும் இயக்கவில்லை. தற்போது அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.