சென்னை: கிச்சிலி கிழங்கு அல்லது பூலாங்கிழங்கு அல்லது வெள்ளை மஞ்சள் அல்லது அம்பா மஞ்சள் என்று பல்வேறு பெயர்களை கொண்ட இந்த மூலிகையின் பயன்கள் என்னென்ன தெரியுமா? பூலாங்கிழங்கில் வாசனை பவுடரை எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?
வாசனைக்கு மட்டுமே பூலாங்கிழங்கு பயன்படுவதாக நினைக்கிறார்கள்.. கசப்பு சுவையுடன், மாம்பழ வாசனையும் கலந்து, பார்ப்பதற்கு இஞ்சி போலவே இருக்கும் இந்த கிழங்கின் மருத்துவ பயன்கள் அபரிமிதமானது.
நன்மைகள்:
பூலாங்கிழங்கு பெருமளவு நன்மைகளை பெண்களுக்கு வாரி தருகிறது.. காரணம், இதில் ஏகப்பட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடங்கியிருக்கின்றன.. இதனால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்கிறது. அதனால், இந்த கிழங்கில் டீ, சூப் போன்றவை தயாரித்து குடிக்கலாம்.
பூலாங்கிழங்கில் கலந்துள்ள குர்குமின் என்ற பொருள், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுவதுடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது…
புற்றுநோய் சிகிச்சை:
அதுமட்டுமல்ல, புற்றுநோய் சிகிச்சையில் இப்போதுவரை இந்த வெள்ளை மஞ்சளின் பயன்பாடு அபரிமிதமாகவே இருக்கிறதாம்.. அதிலும், பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை நெருங்க விடாமல், இந்த பூலாங்கிழங்கின் சாறு, மருந்தாக திகழ்கிறதாம்.
சுவாச மண்டலத்துக்கும், நுரையீரலுக்கும் நன்மை தந்து, ஆஸ்துமா, சளி, இருமல் பிரச்சனைகளை போக்கக்கூடியது இந்த கிழங்கு. அத்துடன் இரைப்பை குடல் சார்ந்த பிரச்னைகள், வாய்வு, அஜீரணம் போன்றவற்றை தீர்க்கவும் இந்த கிழங்கு உதவுகிறது..
உடல்நல கோளாறு:
பூலாங்கிழங்கை உலர்த்தி இடித்து பவுடராக்கி, சலித்து பூலாங்கிழங்கை பவுடராக அரைத்து வைத்துக் கொண்டால், பல உடல்நலக்கோளாறுகளுக்கு பயன்படுத்தலாம். வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சலுக்கு இந்த பொடியில் சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.. அல்லது இந்த பூலாங்கிழங்கில் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தாலே இருமல், சளி கட்டுப்படும்.. அதேபோல, உடலில் காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி, புண்கள், போன்றவை ஏற்பட்டால், இந்த பொடியை, தண்ணீரில் குழைத்து பற்று போல போடலாம்.
வாசனை கிழங்கு:
இது ஒரு வாசனை கிழங்கு என்பதால், சருமத்துக்கு மருந்தாக பயன்படுகிறது.. அதனால்தான், அழகுசாதன பொருட்கள் தயாரிப்புகளில் இந்த கிழங்குகளை பயன்படுத்துவார்கள்.. இதனால், வயதான தோற்றமும் தள்ளிப்போடப்படும்.. முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை தருவதற்கும் இந்த கிழங்கு பயன்படுகிறது. இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள்தான் இதற்கு மருந்தாகின்றன.. வெறுமனே இந்த பூலாங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடலுக்கு பூசி குளித்தாலே, உடல் நாற்றம், வியர்வை, அரிப்பு, நமைச்சல் ஓடிவிடும்.. அந்தவகையில் வீட்டிலேயே, பூலாங்கிழங்கு பவுடரை எப்படி அரைக்கலாம் தெரியுமா?
நாட்டு மருந்துகள்:
நாட்டு மருந்துகளில் கிடைக்கும், பூலாங்கிழங்கு -100 கிராம், மரமஞ்சள்-100 கிராம், வெட்டிவேர் – 100 கிராம், கார்போக அரிசி – 100 கிராம், தாமரை கிழங்கு – 100 கிராம், சந்தனக்கட்டை – 100 கிராம், நெல்லிக்காய் – 100 கிராம், அகில்கட்டை – 100 கிராம், பெருஞ்சீரகம் – 100 கிராம், கசகசா – 100 கிராம், கோரைக்கிழங்கு – 100 கிராம் போன்றவற்றை வாங்கி, தனித்தனியாக இவகைளை நிழலில் உலர்த்தி கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைக்க வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்றாக கொட்டி கலந்து எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். 4, முதல் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்..
சரும கவசம்:
3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே பயன்படுத்தலாம். இந்த பவுடரை உபயோகப்படுத்தினால் சோப்பு தேவையில்லை.. இந்த பொடியை மட்டுமே தேய்த்து குளித்துவந்தால், பருக்கள் கரும்புள்ளிகள் நீங்கி, வியர்வை நாற்றமும் வராது.. மிகச்சிறந்த கிருமி நாசினி என்பதால், சருமத்துக்கு நறுமணத்தை தந்து சருமத்தை கவசம் போல பாதுகாக்கிறது.