தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவை தொகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் .
கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தங்கியிருந்து பரப்புரை செய்தாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தான் வெற்றிபெறும் என அந்தத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று கோவைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி உத்தரவிட்டதால் தான் கோவை தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறினார்.
டெல்லி அரசியலில் தனக்கு விருப்பமில்லை எனவும், தமிழக அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவை தொகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் .
தோல்வி பயத்தால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2026 இல் ஆட்சியமைப்பதற்காகவே பிரதமர் வருகை தருவதாகக் கூறினார்.