சென்னை:
பப்பாளி எந்த அளவுக்கு நமக்கு நன்மைகளை தருகிறதோ, அதைவிட அதிகமான நன்மைகளை தரக்கூடியதுதான், பப்பாளி விதைகள். கல்லீரலின் பாதுகாப்புக்கு இந்த பப்பாளி விதைகள் பேருதவி புரிகின்றன. பப்பாளி விதைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.. பழத்தை சாப்பிடும்போது, இந்த விதைகளை தூக்கி போட்டுவிடாமல், கழுவி காயவைத்து பவுடராக்கி எடுத்து கொண்டால், பல்வேறு வகைகளில், பல்வேறு உடல்நலம் சார்ந்த கோளாறுகளை தீர்க்க பயன்படுத்தலாம். குறிப்பாக, கால் ஸ்பூன் முதல் ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே இந்த விதைகளை பயன்படுத்த வேண்டும்.
சத்துக்கள்:
இந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டானின்கள், சபோனின்கள் போன்ற ஏகப்பட்ட ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ளன. இவைகள் எல்லாம் சேர்ந்துதான், நச்சுக்களை கொன்று, நம்முடைய உடலில் நோய்கள் எதுவும் அண்டாமல் காக்கின்றன.. பப்பாளி விதையிலுள்ள மூலக்கூறுகள் பூஞ்சை, பாரசைட்டுகள், ஈஸ்ட் போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை.
எனவே, பெண்களுக்கு இந்த பப்பாளி விதைகள் வரப்பிரசாதம் எனலாம்.. மாதவிடாயை தூண்டவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை நீக்கவும் இந்த விதைகள் உதவுகின்றன.. பீட்டா கரோட்டின் இந்த விதையில் நிறைந்திருப்பதால், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் உற்பத்தியை சீராக்குகிறது.
பெண்கள்:
அடிவயிற்று பிரச்சனை, வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இப்படி வயிறு சம்மந்தப்பட்ட அத்தனை தொந்தரவுகளுக்கும் பப்பாளி தீர்வாக உள்ளது… அதனால்தான், பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும் என்பார்கள்.. இந்த விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம், மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கின்றன.. இதனால், உடல் பருமன் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது
பெரும்பாலும், கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாக உபயோகப்படுகிறது.. ஆனால், கல்லீரலில் உள்ள நச்சுக்களையும், கிருமிகளையும் அழிக்க, பப்பாளியைவிட, அதன் விதைகளே சிறந்தது.. கல்லீரல் சிரோசிஸ் போன்ற நோய்களை அண்டாதவாறு இந்த விதைகள் பணிபுரிகின்றன. கல்லீரலின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டுமானால், பப்பாளி விதைகளை பயன்படுத்தலாம்.
எப்படி சாப்பிடலாம்:
கல்லீரலை சுத்தம் செய்ய, பப்பாளி விதைகளை, சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நான்கைந்து விதைகளை நசுக்கி, எலுமிச்சம் பழம் சாறுடன் சேர்த்து சாப்பிடலாம்.. ஆனால், இந்த விதைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது கூடுதல் பலனை தரும். இந்த விதைகள், சரும பாதுகாப்புக்கும் நலன் தருபவை.. சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கக்கூடியது.. விதைகளில் சிறிது எடுத்து, பாலில் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் வறட்சி நீங்கும்.. சரும சுருக்கங்களும் நீங்கி, முதுமை தள்ளிப்போடப்பட்டுவிடும்.
இந்த விதைகள் தலைமுடி வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.. இந்த விதையை பவுடராக்கி, சிறிது தேனுடன் கலந்து தலையில் ஹேர்பேக் போல போட்டு வந்தால், தலைமுடி வலுவாகும்.
தவிர்க்கலாம்:
ஆனால், ஒரு ஸ்பூனுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இதனால், மலட்டுத்தன்மை ஏற்படும்.. அதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமாம். சர்க்கரை நோயாளிகளும், மூட்டு வலி பாதிப்பிருப்பவர்களும், டாக்டரின் ஆலோசனையை பெற்றே சாப்பிட வேண்டும்.