மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது
ரேசன் அட்டை இல்லாமல், மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ரேசன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரேசன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் புயல் வெள்ள நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்று முதல் ரூ. 6000 வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.