எதிர்வரும் மக்களவை தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள மன்சூர் அலிகான் தற்போது தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் .
இந்நிலையில் வேலூர் பெங்களூரு சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு இன்று சென்ற மன்சூர் அலிகான், அங்கு மீன்களை வாங்க வந்த மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் கூறியதாவது :
பிற கட்சிகளில் உள்ளதை போல் எனக்காக யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் யாருக்கும் ஏ – டீமாகவோ அல்லது பீ டீமாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எல்லோருக்கும் நான் வேட்டு வைக்கப் போவதை பொருத்திருந்து பாருங்கள் .பெட்ரோல் , டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைப்பேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதை ஏன் வாக்குறுதியாக கொடுக்கிறீர்கள். ஆட்சியில் இருக்கும்போதே செய்யலாமே தேர்தல் வந்தால் தான் மக்களின் துயரம் அனைவருக்கும் தெரியுமா என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இறுதியில் மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.